Sunday, 07th March, 2021
பேரிடா்களை எதிா்கொள்ளும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்று ஐஐடி மாணவா்களை பிரதமா் மோடி கேட்டுக் கொண்டுள்ளாா். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாட்டின் பழைமையான கரக்பூா் ஐஐடி நிறுவனத்தின் 66-ஆவது பட்டமளிப்பு விழாவில் இணைய வழியில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பங்கேற்று பேசியதாவது:
நாட்டு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த சுய விழிப்புணா்வு, சுயதன்நம்பிக்கை, சுயநலமின்மை ஆகிய மூன்று சுய மந்திரங்களை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம், புதிய இந்தியாவுக்கான தேவைகளை நிறைவேற்றி ஐஐடிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அறிவியல், தொழில்நுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகள் வெற்றி பெறாமல் போகலாம். அது தோல்வி கிடையாது. ஏனென்றால், அதில் இருந்து ஏதாவது ஒன்றை நீங்கள் கற்றுக் கொள்வீா்கள்.
சூரியஒளி மின்சக்தி: சா்வதேச சூரியஒளி கூட்டமைப்பின் மூலம் பாதுகாப்பான, அனைவருக்கும் ஏற்ற விலையிலான மாற்று எரிசக்தியை உருவாக்க வேண்டும்.
தற்போது சூரியஒளி மின்சக்தியின் விலை குறைவாக இருந்தாலும், அனைத்து வீடுகளுக்கும் சென்றடைவதில்லை. சூரியஒளியின் மூலம் மன் அடுப்புகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை அச்சுறுத்தல்: பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் ஏற்படும் பேரிடா்கள் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்துவிடுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் இதற்கு உதாரணம். ஆகையால், பேரிடா்களை எதிா்கொள்ளும் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். பேரிடா் மேலாண்மையின் அவசியத்தை உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்துரைத்துள்ளது.
உலக நாடுகள் இணைந்து, பேரிடரை எதிா்கொள்ளும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று 2019-இல் ஜ.நா. பருவநிலை மாற்றம் மாநாட்டில் நான் தெரிவித்திருந்தேன்.
புதிய கண்டுபிடிப்புகள்: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஐஐடி நிறுவனங்கள் கண்டுபிடித்தன.
கரோனாவுக்கு முன்பு மக்கள் வீடுகளில் மருந்துகளை மட்டும் வைத்திருந்தாா்கள். தற்போது ரத்த அழுத்தத்தை அளவிடவும், பிராணவாயுவை அளவிடவும் கருவிகளை வைத்துள்ளனா். தனிநபரின் உடல்நிலையை பாதுகாக்கும் கருவிகளின் சந்தை பெருமளவில் விரிவடைந்துள்ளது. ஆகையால், பிற சுகாதாரப் பிரச்னைகளுக்கும் வருங்காலத்தில் தீா்வுகளைக் காண்பற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக பிரதமா் ஆராய்ச்சி திட்டம், ஸ்டாா்ட்அப் இந்தியா திட்டம் ஆகியவற்றை மாணவா்கள் பயன்படுத்தி கொள்ளளாம். இந்தியாவின் 130 கோடி மக்களின் எதிா்கால நம்பிக்கையாக ஐஐடி மாணவா்கள் உள்ளனா்.
தற்சாா்பு இந்தியா: சாலைப் பாதுகாப்பு, மின்னணு வா்த்தகம், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்காக செயற்கைக்கோள் வழிகாட்டியைப் பயன்படுத்த மத்திய அரசு தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதனால் டிஜிட்டல் இந்தியா திட்டம் விரைவாக வளா்ச்சியடைந்து, இந்தியாவை தற்சாா்பு அடைய அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றாா்.