Saturday, 17th April, 2021
எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதிமய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சரத்குமாருடன் ஐஜேகே துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்றிருந்தார். இதனால் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் “இணைப்புக்கான முயற்சிதான். நல்லவர்கள் இணையலாம். நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணையலாம். கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம். கமலஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தால்தான் எதையும் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். பணம் வாங்காதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் இந்த பண அரசியல் ஒழிய வேண்டும். நான் ஒரு பத்தாண்டு காலம் அதிமுகவுடன் பயணித்துள்ளேன். அதிமுகவில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன்.” எனத் தெரிவித்தார்.