Saturday, 17th April, 2021
பிரதமர் மோடியை சந்தித்தது மறக்க முடியாத தருணம் என அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை, பிரதமர் மோடி கடந்த மார்ச் 1-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இந்நிலையில், இன்று காலை 2வது டோஸ் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
இதுகுறித்து நிவேதா கூறுகையில், “பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நான்தான் செலுத்தினேன். இன்று, அவரைச் சந்திக்கவும், அவருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி போடவும் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் எங்களுடன் பேசினார். நாங்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்” என்றார்.
photo courtesy: ANI
இதனிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன். வைரசை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும், விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.