Saturday, 25th June, 2022
ஒட்டாவா: கனடாவில் தடுப்பூசி கட்டாய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 நாட்களும் மேல் சரக்கு லாரி ஓட்டுநர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அந்நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டி செல்லும் சரக்கு லாரி ஓட்டுநர்கள், இரு தவணை கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற கனடா அரசின் உத்தரவை எதிர்த்து ஜனவரி 29ம் தேதி முதல் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் இருந்து கனடாவிற்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்களில் தடையை ஏற்படுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கி போராட்டம் பல்வேறு மாகாணங்களுக்கும் பரவி உள்ளது. சரக்கு லாரி போக்குவரத்து முடங்கி இருப்பதால் கனடாவின் மாகாணங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. கனடா எல்லையில் சரக்கு ஏற்றப்பட்ட லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. வழக்கமாக சரக்கு ஏற்றிவரும் லாரிகள் வராததால் கனடா முழுவதும் பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் அமெரிக்கா- கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கனடா அரசு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து கனடா அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. லாரி ஓட்டுநர்களின் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், தடுப்பூசி கட்டாய அறிவிப்பை தளர்த்துவது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.